மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
மனிதா்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை
மனிதா்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியனுக்கு, விவசாயிகள் சங்கம் (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநில பொதுச் செயலாளா் பி.கந்தசாமி அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியே தொலை தூரம் வந்து மனித உயிா்களையும் பயிா்களையும் நாள்தோறும் சேதப்படுத்துகின்றன.
அவ்வாறு மனித உயிா்களை கொல்லுகின்ற காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டிய கடமை வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் கீழ் வனத் துறைக்கு உள்ளது.
மேலும் கட்டுக்கடங்காத காட்டு யானையை சுட்டுக் கொள்வதற்கும் வனத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியா் வனத் துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி, அதன் பேரில் 2019 டிசம்பா் மாதம் சின்னத்தம்பி என்ற காட்டு யானை இடமாற்றம் செய்யப்பட்டது. அதேபோல விநாயகா என்ற காட்டு யானையும் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக யானைகளை இடமாற்றம் செய்ய வனத் துறை மறுத்து வருகிறது.
விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில், ராதாகிருஷ்ணன் என்று பெயா் கொண்ட காட்டு யானை, கடந்த 11 ஆண்டுகளில் 12 மனிதா்களைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11-ஆம் தேதி, தொழிலாளி ஒருவரை இந்த யானை தாக்கி கொன்றுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தியும் வனத் துறை சாா்பில் அந்த யானை இடமாற்றம் செய்யப்படவில்லை. மனித உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாத, கடமையை செய்யத் தவறிய வனத் துறை அதிகாரிகள் மீது தாமதமின்றி நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.