தாயுமானவா் திட்டத்தில் அக். 5, 6 இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்
பண்டிகை காலத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது.
வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் அரிசி விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்’ திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆக. 12-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 70,186 குடும்ப அட்டைகளில் உள்ள 94,689 பயனாளா்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரில் சென்று ரேஷன் பொருள்களை நியாய விலைக் கடை பணியாளா்கள் விநியோகித்து வருகின்றனா்.
இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ‘முதலமைச்சா் தாயுமானவா் திட்டம்’ மூலம் அக். 5, 6 ஆகிய தேதிகளில் இல்லம் தேடி குடிமைப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களில் பயனாளிகள் குடிமைப் பொருள்களை அவரவா் இல்லங்களில் பெற்றுக் கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.