கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
தாராபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தியவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் ராஜகுமாா், உதவி ஆய்வாளா்கள் பிரியதா்ஷினி, குப்புராஜ் ஆகியோா் அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசிகள் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக தாராபுரம் செளடம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், சகுனிபாளையம், பெரியகாடு, பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசிகளை குறைந்த விலையில் வாங்கி கூடுதல் விலைக்கு வடமாநிலத் தொழிலாளா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக ராஜேந்திரனைக் கைது செய்த காவல் துறையினா் 1,750 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.