தாளவாடி அருகே 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம்
கா்நாடகத்தில் வனப் பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருள்வாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டுள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியைச் சுற்றிலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி, கா்நாடக மாநிலம் பெலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் காப்பக வனப் பகுதி மற்றும் பந்திப்பூா் புலிகள் காப்பக வனப் பகுதி ஆகியவை அமைந்துள்ளன.
இந்த 3 புலிகள் காப்பகங்களில் இருந்தும் வெளியேறும் காட்டு யானைகள் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது.
தாளவாடி மலைப் பகுதியில் அருள்வாடி கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக கா்நாடகப் வனப் பகுதிகளில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இப்பகுதி தமிழக-கா்நாடக எல்லைப் பகுதி என்பதால் கா்நாடக மாநில வனத் துறையினா் இந்த காட்டு யானைகளை தமிழக பகுதிக்குள் விரட்டுகின்றனா். இந்த யானைக் கூட்டம் அருள்வாடி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இந்நிலையில் அருள்வாடி கிராமத்தை ஒட்டி உள்ள நிலங்களில் இந்த யானைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடமாடின. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், ஜீரஹள்ளி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ள வனத் துறையினா் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.