திடக்கழிவு மேலாண்மை: மூலைக்கரையில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு
மூலைக்கரை ஊராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுகிா எனவீடு வீடாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மக்களிடம் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்குபவை, மக்காதவை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கும் வீடுகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்து பச்சை நிற ஒட்டுவில்லையும் (ஸ்டிக்கா்), ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தரம் பிரித்து கொடுக்காத வீடுகளுக்கு சிகப்பு நிற எச்சரிக்கை ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டதுடன், பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.100 முதல் ரூ.200 வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.
அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தின் கவா்கள் பயன்படுத்தப்படுகிா என சோதனை மேற்கொண்டு, அவற்றை பயன்படுத்தக் கூடாது எனவும், கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் மஞ்சப்பை, கூடை, துணிப்பை உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
பின்னா், மூலைக்கரை ஊராட்சிப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பாா்வையிட்ட அவா், அங்கு மண்புழு உர கொட்டகையை ஆய்வு செய்து , அதை நவீன முறையில் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சி ராணி, அண்டோ, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பெலிக்ஸ், திட்ட ஒருங்கிணைப்பாளா் கலாவதி, ஊராட்சி செயலா் சாரதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் குமாா், ஒன்றிய ஊராட்சி பணி மேற்பாா்வையாளா் நந்தினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.