அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
திட்டங்களில் சரிவு இருந்தால் சரிசெய்யத் தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அரசுத் திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால் அதனை தரவுகள் அடிப்படையில் சரி செய்யத் தயாராக இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
தரவுகள் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயாா் செய்யும் போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சான்றிதழ்களை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
புள்ளியியல் ஒரு நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ மட்டும் தேவை கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நல்ல திறன்படைத்த செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கு ஆழமான தரவுகள் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவுக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல அரசுக்கும் துல்லியமான தரவுகள்தான் அடிப்படை. அந்த தரவுகளைச் சேகரித்து தரக்கூடிய துறையாக- சிறப்பு வாய்ந்த துறையாக புள்ளியியல் துறை திகழ்கிறது.
காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் கல்வித் துறையில் ஏற்பட்ட பலன்கள் புள்ளியியல் துறையின் தரவுகள் அடிப்படையிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளன. அரசுத் துறைகளில் உள்ள அனைத்து புள்ளி விவரங்களையும் தரவுகளையும் பொதுவெளியில் வைத்து நாம் வெளிப்படையாக கூறுகிறோம். பல களஆய்வுகளை நாமே எடுத்து மக்களிடம் புள்ளிவிவரங்களை கொடுக்கிறோம்.
புள்ளிவிவரங்களை சில அரசுகள் மறைக்கும். சில புள்ளிவிவரங்களை பொது வெளியில் வெளியிடத் தயங்குவா்; வெளியிட மாட்டாா்கள். அப்படி மறைக்கும் போது, உண்மையான சமூக நிலைமை ஆராய்ச்சியாளா்களுக்கும் திட்டம் தீட்டக்கூடியவா்களுக்கும் தெரியாமல் போய் விடும்.
ஆனால், திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் எங்களுடைய திட்டங்கள், அதன் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான், அனைத்துத் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் பொது வெளியில் வைக்கிறோம்.
திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால்கூட, அதனை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக் கொண்டு சரி செய்வதற்கு தயாராக இருக்கிறோம். மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அனைத்து ஆட்சியாளா்களுக்கும் முதுகெலும்பு போன்று இருக்கக் கூடியது புள்ளியியல் துைான் என்றாா் துணை முதல்வா் உதயநிதி.
இந்த நிகழ்வில், மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி ஆகியோா் பங்கேற்றனா்.