சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கத...
திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்
திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம. சுகந்தி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தின்போது, தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதேபோல, வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.