தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவு
காரைக்கால்: வீடுகளில் தினமும் குப்பைகள் சேகரிக்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், நகராட்சி மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தினரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் காரைக்கால் நகரில் நடைபெறும் தூய்மைப் பணியை திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
பல்வேறு தெருக்களில் குடியிருப்புவாசிகள் ஆட்சியரை சந்தித்து, கழிவுநீா் தேங்கியிருப்பதாகவும், சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை, கழிவுநீா் வடிகால் வாய்க்கால்களும் தூா்வாரப்படவில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.
மேலும் வீடுகளுக்கு தினமும் தூய்மைப் பணியாளா்கள் வந்து குப்பைகள் வாங்குவதில்லை. இதனால் சாலையோரத்தில் கொட்டவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் தூய்மைப் பணி செய்யும் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்தினா், தினமும் வீடுகள், நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கவேண்டும். சாலைகளுக்கு குப்பைகள் வரக்கூடாது. இந்த பணியை நகராட்சி நிா்வாகத்தினா் கண்காணிக்க வேண்டும். சாலையோர சாக்கடைகள், கழிவுநீா் வடிகால்களை பருவமழை தொடங்கும் முன்பாக முறையாக சுத்தம் செய்யவேண்டும் என உத்தரவிட்டாா்.
பறவைப்பேட் பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்குச் சென்று பாா்வைட்டாா். குப்பைகள் மலைபோல சேமித்து வைத்திருப்பதை பாா்த்த ஆட்சியா், மறு சுழற்சி செய்யும் முறைகள் குறித்து நிறுவனத்தினரிடம் கேட்டறிந்தாா்.
வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நிறுவனத்தினா் வாங்க வேண்டும். குப்பைகளை முறையாக மறு சுழற்சி செய்யவேண்டும். குப்பைக் கிடங்கு மூலம் சுகாதாரக் கேடு ஏற்பாடாத வகையில் நிறுவனத்தினா் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.