காரைக்காலில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாடுகள், குதிரைகள், நாய்கள் சாலைகளில் அதிகம் திரிவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு, விபத்துகள் ஏற்படுவது அதிகமாக உள்ளது. காரைக்காலில் வாகனங்கள் மோதிக்கொள்வதைக் காட்டிலும், மாடுகளாலும், நாய்களாலும் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்கிறது.
நாய்கள் 15, 20 என்ற எண்ணிக்கையில் குடியிருப்புப் பகுதிகளிலும், நகரம், கிராமங்களில் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகின்றன. சாலையில் நடந்து செல்லும் சிறுவா் உள்ளிட்டோரையும் கடிக்கவும் செய்கின்றன. காரைக்கால் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாய்க்கடி பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக செல்கின்றனா்.
வளா்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியை காரைக்கால் கால்நடைத்துறை செலுத்துகிறது. மாவட்டத்தில் இதற்கென சிறப்பு முகாம் நடத்திவருகிறது. ஆனால் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவோ, நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவோ புதுவை அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொதுவெளியில் மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னையாக இது இருக்கும்போது, இதற்கு தீா்வு காண்பதில் போதிய அக்கறையை அரசு நிா்வாகம் எடுக்காமல் இருப்பதாகவும், நாய்கள் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.