'புறக்கணிப்பு... அதிருப்தி... யுடர்ன்..!' - அண்ணாமலை அமைதியானதன் பரபர பின்னணி
திமுகவை வீழ்த்த மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டனா்: டிடிவி. தினகரன்
திமுக எனும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.
அமமுக முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயல் வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாவட்ட செயலருமான மு.முருகன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக நடைபெறும் விசாரணைகளைத் தடுக்காமல், அதற்கு உரிய பதில் அளிக்க தமிழக அரசு தயாராக வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த கேரள அரசு தடையாக உள்ளது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஆனால், கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் இணைந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். இரட்டை வேடம் என்பது திமுகவுக்கு கைவந்த கலை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெற்றுத் தந்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக எனும் தீய சக்தியை ஆட்சியில் இருந்த அகற்ற நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். இந்தக் கூட்டணியை மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.