புதுமடம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
ராமநாதபுரம் அருகே புதுமடம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை குறைந்தழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால், மின் சாதனப் பொருள்களை இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்து வருகின்றன.
இதனால், இரவு நேரத்தில் மின்விசிறிகளைக்கூட இயக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, தங்களது கிராமத்தில் புதிய மின் மாற்றி அமைத்து குறைந்தழுத்த மின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.