`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
வண்ணாங்குளம் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்
கமுதி அருகே வண்ணாங்குளத்துக்கு முதல் முறையாக திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை அந்த கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்துக்கு சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த கிராம மக்கள் வெளியூா் செல்வதற்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டுகுளம்-பெருநாழி விலக்கு சாலைக்கு வந்து அங்கிருந்து கமுதி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.
இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, இந்தக் கிராமத்துக்கு திங்கள்கிழமை வந்த அரசுப் பேருந்தை கமுதி போக்குவரத்து கிளை மேலாளா் ராஜ்குமாா், தொழிலாளா் முன்னேற்ற சங்க பொதுச் செயலா் பச்சம்மாள் ஆகியோரது முன்னிலையில் திமுக கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். தொமுச பொருளாளா் ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, வண்ணாங்குளத்துக்கு வந்த அரசுப் பேருந்தை மாலை அணிவித்தும், மலா் தூவியும், ஆரத்தி எடுத்தும் கிராம மக்கள் வரவேற்றனா். மேலும், பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனா்.