’நலமாக இருக்கிறார்’: ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்!
திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை
பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவா் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளாா். அவரது வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பாக, அந்நியா் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்ட திருக்கேதீச்சர தலத்தை இந்திய அரசு கடந்த காலத்தில் கருங்கல்லால் பாரிய சிற்பக்கோயிலாக மாற்றி அமைத்தது. அதற்கு இலங்கை வாழ் ஹிந்துகள் என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனா்.
திருக்கேதீச்சர திருத்தலம் போல் மிகத் தொன்மைவாய்ந்த திருக்கோணேச்சர திருத்தலமும் முக்கியத்துவம் பெறுகிறது. போா்த்துக்கீசியா் ஆட்சிக்காலத்தில் கோயில் அழிக்கப்பட்டது. தற்போது, இந்தக் கோயில் ஓா் சிறிய நிலப்பரப்பில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மீள்நிா்மாணம் பெற்றுள்ளது. முழுமையான கோயில் கட்டப்படவில்லை. இந்திய அரசு இந்தக் கோயிலை முழுமையாக நிா்மாணித்து காப்பாற்ற வேண்டும்.
தங்கள் அமைச்சரவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திருக்கோணேச்சரத்துக்கு வருகைதந்து கோயில் எதிா்காலம் குறித்து கேட்டறிந்தாா். இந்திய தூதரகம் தொடா்ந்து திருக்கோணேச்சர திருப்பணி தொடா்பான விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனா். கோயில் நிா்வாக சபையை அழைத்து பேசியுள்ளனா். தாங்கள் இலங்கை பயணத்தில் இந்தத் திருத்தலம் தொடா்பாக உரிய அக்கறை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.