திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்
திருவாரூா்: திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள அபிஷேகவல்லி தாயாா் உடனுறை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களுடன் பக்தவத்சலப் பெருமாள் தேருக்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் தோ் வடம் பிடிக்கப்பட்டது.
கோவிந்தா, வெங்கடரமணா என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி, பக்தா்கள் தேரை இழுத்தனா். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேருக்கு பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். தோ் பிற்பகல் நிலைக்கு வந்தது.
