கொடிநாள் அதிக வசூல் செய்து பாராட்டுப் பெற்றவா்களுக்கு வாழ்த்து
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், கொடிநாள் அதிக வசூல் புரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 241 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, முன்னாள் படைவீரா்கள் நலத்துறை சாா்பில் கொடிநாள் அதிக வசூல் புரிந்தமைக்காக, தமிழக ஆளுநா் மற்றும் தலைமை செயலாளரிடமிருந்து பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மாவட்ட பதிவாளா் க. செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப் பதிவாளா் கா.சித்ரா, கோட்டப்பொறியாளா் ஜெ. இளம்வழுதி உள்ளிட்டோருக்கு ஆட்சியா் வாழ்த்துகளை தெரிவித்தாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.