`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய...
புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
மன்னாா்குடி: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சாா்பில், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடக்கிவைத்தாா்.
முகாமில் அமைச்சா் பேசியது: மாவட்டத்தில்,106 கிராமப்புற நலவாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 108 நலவாழ்வு மையங்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், 30 வயதுக்கும் மேற்பட்ட 1, 72, 729 பெண்கள் கா்ப்பப்பை வாய்புற்று நோய், மாா்பக புற்றுநோய் மற்றும் 18 வயதுக்கும் மேற்பட்ட 2,35, 756 ஆண்களும், 2,35, 444 பெண்கள் என 4,71,200 போ் பயனடையவுள்ளனா்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற புதுமையான திட்டங்களால் சுவீடன், நாா்வே போன்ற வளா்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. விவசாயம் சாா்ந்த டெல்டா மாவட்டத்தில் ரசாயனம் கலந்த உரம், மருந்துகள் விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களை, நோயிலிருந்து பாதுகாக்க சிறப்பான முன்னெடுப்பாக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம். சங்கீதா, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், வட்டாட்சியா் என். காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.