செய்திகள் :

திருக்குறள் மாணவர் மாநாடு: "மாணவர்கள் படைப்பாளிகளாக வரவேண்டும்; ஏனென்றால்.." - முத்துக்குமரன் பேச்சு

post image

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.‌

மாநாடு நிகழ்ச்சியைத் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசினர். தொடர்ந்து விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமைத் தாங்கிப் பேசினார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 970 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாடு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கிடையே திருக்குறள் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் உள்பட பல்வேறு தமிழ் ஆளுமைகள் சிறப்புரையாற்றினர். இதன் ஒருபகுதியாக, பிக்பாஸ் சீசன்-8 வெற்றியாளர் முத்துக்குமரன், திருக்குறள் மாநாடு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பேச அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் சொந்த காரணங்களினால் அவர் நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, காணொலி வாயிலாக முத்துக்குமரன் பேசுகையில், "திருக்குறள் மாணவர் மாநாட்டுக்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 பேரிலிருந்து விருப்பப்பட்ட 970 நபர்கள் கலந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை மாநாட்டுக்கு வந்திருக்கும் அனைத்து மாணவர்களுமே வெற்றியாளர்கள்தான். ஆகவே வெற்றியாளர்களான உங்களின் மத்தியில் தமிழும், நானும் எனும் தலைப்பில் என்னைப் பேச அழைத்தார்கள். ஆனால் அதைத் தமிழும், நாமும் எனப் பேசினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

வாழ்க்கை நம்மை ஏதாவது ஒருகட்டத்தில் நம்மை ஒரு படி மேலே ஏற்றிவிடும். வேறொரு பக்கமாகத் திசை திருப்பிவிடும், ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தும். அப்படிப்பட்ட ஒரு மாயாஜாலமாகத்தான் இந்த திருக்குறள் மாணவர் மாநாட்டைப் பார்க்கிறேன். இந்த மாயாஜாலத்தின் அருமை உங்களுக்கு இப்போது தெரியாது. பின்னாளில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நபர்களாக உச்சிதனில் இருக்கும்போதும், அதிகார ஆளுமைகளாக இருக்கும்போதும் இதை உணர்வீர்கள். வாழ்க்கையில் இப்போது உங்களுக்கு 'காதல்' முக்கியம். அது எந்த மாதிரியான காதல் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் மீது ஜென்னிக்கு இருக்கும் காதலைப் போல, வாழ்க்கையில் உங்களை உயர்த்தி நிறுத்தக்கூடிய திறன் எதுவோ அதன் மீது காதல் கொள்ள வேண்டும். உங்களைப் பண்பட்டவராக மாற்றக்கூடிய விஷயம் எதுவோ, உங்களின் இலக்கு என்னவோ அதை நீங்கள் தேடவேண்டும். அதுதான் வாழ்க்கையின் எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் உங்கள் கூடவே இருக்கும்.

பேச்சு..

நீங்கள் உங்களுக்கான விஷயத்தை மொழியின் வழியாகத் தேடலாம். தமிழ் படித்தால் காசு, பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அது பிரதானமல்ல. தமிழ் மொழி உங்களைச் செழுமைப்படுத்தும், வளப்படுத்தும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித்தரும். அகவாழ்வையும் புறவாழ்வையும் எவ்வாறு வாழ்வது எனக் கற்றுக் கொடுக்கும். இன்றைக்கு முத்துக்குமரனாகிய என் மீது அநேக பேர் பிரியமாக உள்ளனர்.

பிக்பாஸ் சீசன்‌ 8 நிகழ்ச்சியில் 24 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் சொன்னது, 'நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது'. இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக நான் பார்க்கிறேன். நான் பெரிய இலக்கியங்களையோ, புராணங்களையோ படிக்கவில்லை. அவற்றைத் தற்போது படித்து வருகிறேன். மனிதனுக்குப் பெரும் மகிழ்ச்சியையும், உயர்வையும் தரக்கூடியது தமிழ்.

உதாரணத்துக்கு யாரெல்லாம் 'ஹீரோ' என நினைக்கிறோமோ அவர்களை எடுத்துக்காட்டாய் பாருங்கள். இங்கு இரண்டு வகை ஹீரோ உள்ளனர். பைத்தியக்காரத்தனமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதன் மூலம் பிரச்னைகளில் சிக்கி பின்னாளில் காணாமல் போனவர்களை விட்டுவிடுங்கள். அப்துல்கலாம், நெல்லை கண்ணன், சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆளுமைகளை எடுத்துக்காட்டாய் பாருங்கள். அவர்கள் இருக்கும் உச்சாணி வரிசையில் முதல் படிக்கான பாதைதான் தமிழ். பின்னாளில் நீங்கள் பெரிய இடத்திற்கு வேலைக்குச் செல்லலாம். சுய தொழில் செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட நிலைகளில் சக மனிதர்களை எவ்வாறு கையாள்வது என்ற தெளிவு நிலையைத் தமிழ் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். இன்று உலக அளவில் தமிழுக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.

மாநாடு

ஆகவே, நீங்கள் ராக்கெட் அறிவியல், வானியல் என என்ன வேண்டுமானாலும் படியுங்கள். ஆனால் அவை அனைத்துமே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தமிழன் இரும்பு பொருட்களைச் செய்து பயன்படுத்தினான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆகவே தமிழைப் படியுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்க்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் அனைவருக்கும் தமிழக அரசின் 1500 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். உங்களுக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தைப் புத்தகம் வாங்குவதற்காகப் பயன்படுத்துங்கள்‌. வாசியுங்கள், புத்தகத்தை வாசிக்க வாசிக்க, மொழியினை அறிய அறிய உங்களின் ஆளுமை அதிகரிக்கும். தெளிவு நிலை அதிகரிக்கும்.

நாளைய உலகத்தில் நீங்களும் ஒரு தவிர்க்க முடியாத அடையாளமாக உருமாறிடத் தமிழ் உங்களை வளர்த்தெடுக்கும். நீங்கள் அனைவருமே படைப்பாளிகளாக உருமாற வேண்டும். ஏனெனில் நீங்களோ, நானோ கூட மரணித்துப் போகலாம், நம்மை மறந்து போகலாம். ஆனால் நமது படைப்புகள் என்றைக்கும் நமக்கு உயிரூட்டுபவையாக இருக்கும். உதாரணத்திற்குத் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஆகவே தமிழ் படியுங்கள், தமிழ் போல் வளருங்கள்" எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் தமிழக மாணவிகள் சாதனை; அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள 3 முதல் முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'வீர கதா 4.0' என்ற திட்டத்தின் கீழ் கவிதை, கட்டுரை எழுதுதல்... மேலும் பார்க்க

``நாங்களும் விமானத்தில் பறக்க வேண்டும்'' -அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்கள்..!

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் மைக்கேல் ராஜ். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமை ஆ... மேலும் பார்க்க