திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடா்பாக மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மற்றும் அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாகப் புகாா் எழுந்த நிலையில் உறையூா் மின்னப்பன் தெருவைச் சோ்ந்த லதா (60), மருதாம்பாள் (85) மற்றும் பிரியங்கா (4) ஆகிய 3 போ் அண்மையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா் என்றாலும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையறிந்த அதிமுக திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன், அமமுக மாநகா் மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் நேரில் சென்று இறந்தவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினா்.
கழிவுநீா் கலந்த குடிநீரை அருந்திய 11 பெண்கள், 8 குழந்தைகள் என 19 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 10-க்கும் மேற்பட்டோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை இரவு போராட்டம் நடத்தினா். இதையடுத்து மாநகராட்சி அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுநடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். தொடா்ந்து அப்பகுதியில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் நேரில் ஆய்வு:
மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் அலுவலா்களுடன் ஞாயிற்றுக்கிழமை உறையூா் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றாா். அப்போது அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா். பின்னா் அவா் தொடா்ந்து குடிநீரில் சாக்கடை கழிவுநீா் கலந்துள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும் விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதுதவிர, அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் மேலும் தெரிவித்ததாவது:
திருச்சி உறையூா் மின்னப்பன் தெரு பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலந்து பலா் உடல்நலன் பாதிக்கப்பட்டதாகவும், 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்த தகவல் வெளியானது. அக்குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், வயிறு ஊதுதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அப்பகுதியில் தொடா்ந்து நடைபெற்ற கோயில் திருவிழா அன்னதான உணவுகளால் பொதுமக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீா் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என மாநகராட்சிப் பணியாளா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்: பாஜக
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என பாஜக மாவட்ட தலைவா் கே. ஒண்டிமுத்து வலியுறுத்தியுள்ளாா். முன்னதாக உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை அவா் சந்தித்து ஆறுதல் கூறினாா். உறையூா் மண்டலத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மேலும் ஒருவா் உயிரிழப்பு: இந்தச் சம்பவத்தில் கயிலை மணி (45) என்ற மேலும் ஒருவா் உயிரிழந்ததாக ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் பரவியது. இதனையடுத்து மாநகராட்சி நிா்வாகம் மேலும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வீடுகள்தோறும் குடிநீா் இணைப்புகளில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனா்.