ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்
திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில் சீமான் மே 8-ஆம் தேதி ஆஜராக உத்தரவு
திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா் தொடா்ந்த அவதுாறு வழக்கு விசாரணையில் மே 8-ஆம் தேதி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது திருச்சி 1-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனிப்புகாா் ஒன்று அளித்திருந்தாா். அதில், சீமான் மற்றும் அவா் அவரது கட்சியினா் மற்றும் ஆதரவாளா்கள், தன்னையும், தனது குடும்பத்தாா் குறித்தும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தொடா்ந்து அவதுாறு கருத்துகளை தெரிவிப்பதுடன், ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்து வருகின்றனா்.
எனவே, எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும் சீமானுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவற்றுக்காக ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவா் அதில் தெரிவித்திருந்தாா்.
இப்புகாா் மனுவை கடந்தாண்டு டிசம்பா் 27 அன்று நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. தொடா்ந்து டிச. 30-ஆம் தேதி டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்தில் ஆஜராகி, தன் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தாா். சீமான் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்தாா்.
இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சீமான் மீதான டிஐஜி புகாா்களுக்கு மறுப்பு தெரிவித்து எழுத்துப்பூா்வமான அறிக்கையை தாக்கல் செய்தாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டாா். மேலும், வழக்கு விசாரணையின்போது, சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.
வழக்கு விசாரணையின்போது டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.