துறையூா் நகா்மன்றக் கூட்டத்தில் திமுக வாா்டு உறுப்பினா்கள் தா்னா
துறையூா் நகராட்சியில் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாகக் கூறி திமுக வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் சிலருடன் சோ்ந்து புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
துறையூா் நகராட்சி ஆணையா் மணப்பாறை நகராட்சியின் பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட பின்னா் அவரை துறையூா் அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள்கூட சந்திக்க இயலவில்லை என்றும், கோப்புகள் கையொப்பத்துக்காக காத்திருப்பதாகவும் புகாா் எழுந்தது. மேலும் சொத்துவரி பல மடங்கு வரி உயா்வுக்கு உரிய விளக்கம் பெற முடியாமல் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனராம்.
மேலும் துறையூா் நகரைச் சோ்ந்தவா்களின் கைப்பேசிக்கு இரு நாள்களுக்கு முன்னா் ஆணையரைக் காணவில்லையென குறுஞ்செய்தியும் வந்தது.
இதையடுத்து துறையூா் நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் ஜெ. காா்த்திகேயன், மு. சுதாகா், ஜானகிராமன், 4 ஆவது வாா்டு உறுப்பினரின் கணவா் பிரபு ஆகியோா் பொதுமக்களுடன் சென்று துறையூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அலுவலகத்திலிருந்த ஆணையா் சுரேந்திரஷா நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.