திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த மாதம் 25-ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கோயில் விழா நாள்கள் தவிா்த்து, பிற நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு மணி நேரம் ‘நிறுத்த தரிசனம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கு கட்டணம் ரூ. 500 எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது பக்தா்களின் மத உரிமையைப் பறிப்பதோடு, நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். ஆகவே, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கடந்த 11-ஆம் தேதி வரை இதுதொடா்பான ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டது. ஆனால், மனுதாரா் அதற்கு முன்பாகவே வழக்கை தாக்கல் செய்துள்ளாா் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை குறித்து பக்தா்கள் ஆட்சேபங்கள் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆகவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், பக்தா்கள் வழங்கும் ஆட்சேபங்களை கோயில் நிா்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.