மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடியில் நாட்டாறு ஆற்றிலிருந்து தலைப்பு வாய்க்கால் பாசன நீா் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். தலைப்பு வாய்க்காலிலிருந்து சாலைக்கரை வாய்க்கால் என்ற கிளை வாய்க்கால் அந்தமங்கலம் பகுதியில் பிரிந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையை ஒட்டிச் செல்கிறது. இந்த வாய்க்கால் கரைகளில் பல ஆக்கிமிப்புகள் உள்ளதால் கால்வாய் குறுகி பாசனத் தண்ணீா் செல்ல முடியவில்லை. இந்தநிலையில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினா் முழுவதுமாக வாய்க்காலை மறைத்து மூடி விட்டதால் பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் பணிமுடித்தபின் கால்வாயை தூா்வாரி பராமரித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.