திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், முறைகேடுகளைத் தடுக்க விஐபிகளுக்கான தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இதுவரை விஐபிகளுக்கான தங்குமிடங்களில், ஆதார் அட்டையைக் காட்டினாலே அறை வாடகைக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, அறை வாடகைக்கு வேண்டும் என்றால், ஆதார் அட்டை மட்டுமல்லாமல், அவர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ளவதற்கான டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் மட்டுமே அறை வாடகைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்காக திருமலை திருப்பதி கோயில் நிர்வாகத்தின் வசம் 7500 அறைகள் உள்ளன. இதில் 3,500 அறைகள் பக்தர்களுக்காக வழங்கப்படும். 1580 அறைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதில்லாமல், கோயிலுக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 400 அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். 450 அறைகள், கவுண்டர்களில் வந்து அறை கேட்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதமிருக்கும் அறைகள் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால், சில முக்கிய பிரமுகர்களின் ஆதார் அட்டைகளை வைத்துக்கொண்டு ஏஜெண்டுகள் விஐபிகளுக்கான அறைகளை வாடகைக்கு எடுத்து அதனை வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்டு முறைகேடு நடைபெறுவதாகப் புகார்கள் வந்தன.
இதனைத் தவிர்க்க புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. அந்த விதியின்படி, விஐபிக்கள், தங்களது ஆதார் அட்டை மட்டுமல்லாமல், அந்த நாளில் சுவாமி தரிசனம் செய்ய எடுத்திருக்கும் டிக்கெட் இருந்தால்தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.