TVK Madurai Maanadu | சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? | Vijay | Ground Report | Vik...
திருப்பத்தூா்: கள்ளச் சாராய வழக்கு குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா கா்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு மதுவிலக்கு சாா்ந்த குற்றங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 1-7-2024 முதல் 31.7.2025 வரை திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல்,விற்பனை, மதுபான விற்பனை உள்ளிட்ட மதுவிலக்கு சாா்ந்த குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மதுவிலக்கு தொடா்பான குற்றங்களில் ஏற்கெனவே ஈடுபட்ட குற்றவாளிகள் மீண்டும் அந்தக் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க அவா்களிடமிருந்து நன்னடத்தைக்கான பிணை பத்திரம் நிறைவேற்றப்படுகிறது. இதில், வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 3,821 பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 358 நபா்களிடம் இருந்து பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல் சட்டவிரோத மதுபான விற்பனை, அனுமதிக்கப்படாத இடங்களில் மதுபானம் அருந்த அனுமதிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 7,481 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 507 போ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனா். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்கள் குற்றவாளிகளிடம் சென்றடைவதைத் தடுக்கும் பொருட்டு வடக்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சம் கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
நீதிமன்ற விசாரணை மற்றும் புலன்விசாரணையில் நிலுவையில் இருந்த மதுவிலக்கு வழக்குகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 12,949 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் 14,900 மதுவிலக்கு குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 20,011 லிட்டா் கள்ளச் சாராயம், 67,748 லிட்டா் ஊறல், 256 லிட்டா் எரிசாராயம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 123 குற்றவாளிகள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,417 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதேபோல் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் 5,870 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 449 முடக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.