பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
திருப்பரங்குன்றம் விவகாரம்: `சிலர் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்கள்!' - அமைச்சர் ரகுபதி தாக்கு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க-விற்கு உறுதி செய்யப்பட்ட வெற்றி. அதேபோல், வரக்கூடிய பொதுத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். அதில், எந்தவித சந்தேகமும் கிடையாது. தமிழ்நாட்டில் எப்போதும் அண்ணன், தம்பிகளாக, சகோதரர்களாக இருந்து வருகின்றோம். அந்த இடத்தில் சிலர் ஏதாவது கலவரத்தைத் தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தான் தமிழ்நாடு. எங்களைப் பொறுத்தவரைக்கும் நிச்சயம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என நம்புகிறோம். அதற்கான முயற்சிகளை அரசு உரிய முறையில் எடுக்கும். இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம். ஆளுநர் உரையைப் புறக்கணித்ததால் தமிழ்நாடு மக்கள் பாதிப்படையவில்லை. ஆளுநர் உரையை வாசித்தாலும், வாசிக்காவிட்டாலும் மக்களுக்குள்ள அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து தான் வருகிறது. ஆளுநர் தான் அவரது கடமையை செய்ய தவறி விட்டார். நாங்கள் எங்கள் கடமையைச் செய்ய தவறவில்லை. மக்களுக்கான பணிகளாக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கின்றோம். சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம், அதேபோல துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என்று எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளோம். அந்த நிர்வாகம் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது. எங்கெங்கெல்லாம் துணைவேந்தர்கள் இல்லையோ அங்கே எல்லாம் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு சிறப்பாக நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருக்கிறதா என்பதை ஒன்றிய அரசு மறந்து விட்டதா என்ற சந்தேகம், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பார்த்தால் தெரிய வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/orqs6dlw/ragupathi-.jpg)
அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டை அவர்கள் புறக்கணித்தாலும், ஒன்றிய அரசு திட்டத்தை தான் நீங்கள் புறக்கணிக்க முடியுமே தவிர, மக்களுக்கான நல்ல திட்டங்கள் போவதை புறக்கணிக்க முடியாது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கொடுக்கும் பணம் எங்களுடைய பணம். ஒன்றிய அரசின் பணம் அல்ல. எங்களது திட்டத்திற்கான பண வசதியை உருவாக்கிக் கொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். ஒன்றிய அரசு பொதுவாக தரும் நிதிகளை பயன்படுத்துவோம். கூடுதல் நிதி, கூடுதலான அறிவிப்புகள் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டை மிக மிக புறக்கணித்து ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. இ.சி.ஆர் விவகாரத்தில் தெளிவான பதிலை நாங்கள் தந்துவிட்டோம். ஊட்டிக்குச் சுற்றுலா செல்வதற்காக அந்த காரில் சென்றவர்கள் தி.மு.க கொடியை பயன்படுத்தியுள்ளனர். அவர்களுடைய உறவினர்கள் எல்லாம் அ.தி.மு.க-வினர் என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க-வுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. எங்களோடு தொடர்பில்லாதவர்களை வைத்து எப்படி எங்களோடு முடிச்சு போட முடியும்?. அதனால், தி.மு.க-வுக்கும், அவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. வீண் பலி சுமத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் வெட்கப்பட வேண்டும்” என்றார்.