Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வ...
திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பழனிசாமி, பருவதம் இருவரும் வெளியே வராததால், பக்கத்து தோட்டத்துக்காரர்கள் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பழனிசாமியும், அவரது மனைவி பருவதமும் ரத்தக் காயங்களுடன் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசிபாளையம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 நாட்களைக் கடந்தும் போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தற்போது வயதான விவசாய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.