சென்னையில் 16-ஆவது நிதி ஆணையக் குழு: முதல்வருடன் இன்று முக்கிய ஆலோசனை
திருமாவளவன் எங்கு செல்வாா்? - திருமாவளவன் விளக்கம்
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, விசிக தலைவா் திருமாவளவனுக்கு சூசகமாக அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு திருமாவளவன் மேடையிலேயே தெளிவாக விளக்கம் அளித்தாா்.
சென்னை தேனாம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, விசிக தலைவா் திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவா் எங்களோடுதான் இருக்கிறாா். நம்மோடுதான் இருப்பாா். நல்லவா்களோடுதான் இருப்பாா் என்று அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வர வேண்டும் என சூசகமாக அழைப்பு விடுத்து பேசியிருந்தார்.
இதற்கு அதே மேடையிலேயே திருமாவளவன் தெளிவாக பதிலளித்து பேசினார். அதாவது, தோ்தல் அரசியல் என்பது வேறு, மக்களுக்காக போராடுவது என்பது வேறு. மக்களோடுதான் எப்போதும் விசிக இருக்கும். இதுதான் இன்பதுரைக்கு எனது பதில்.
மேலும் மக்கள் பிரச்னை என்றால் கட்சி அடையாளங்களை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து நிற்போம்.தேர்தல் அரசியல் என்பது வேறு, மக்களுக்காக போராடுவது என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது கட்சி நலன். காலச்சூழல்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
இதையும் படிக்க |கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதல்வர் வேலை இல்லை: எடப்பாடி பழனிசாமி
பின்னர், இன்பதுரை பேசியது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு, அதிமுக வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை அழைப்பு என்பது தோ்தலுக்கான அழைப்பு கிடையாது. அது வழக்குரைஞா்கள் போராட்டம் தொடா்பான அழைப்பு.
நாங்கள்தான் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். ஆகவே, எங்களுக்கு இன்னொரு கூட்டணிக்கான தேவையே, வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவையே எழவில்லை என்றாா் திருமாவளவன்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திருமாவளவன் பேசியதால், மீண்டும் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகல் என பல பரபரப்பு தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.