திருவண்ணாமலை: முதன்முதலாக 'மலைச்சிட்டான்' வருகை - அண்ணாமலையார் மலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
மலைச்சிட்டான் பறவைகளில் உலகம் முழுவதும் பல வகைகள் இருக்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் indian black bird எனப்படும் ஒருவகை பறவைக் காணப்படுகிறது.
இது ஒரு சிறிய நிலவாழ் பறவையினமாகும். இவை ஆரஞ்சு நிற பிரகாசமான அலகுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் உடல் நிறமானது இருப்பிடத்துக்கு ஏற்ப மாறுபடும் தன்மைக் கொண்டுள்ளது. உதாரணமாக இலங்கையில் உள்ள பறவைகள் கொஞ்சம் வெளிறியதாகவும், மத்திய இந்தியாவிலிருக்கும் பறவைகள் தலை மற்றும் இறகுகள் கருப்பாகவும் உடல் பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
பொதுவாக 1000 அடிக்கு மேல் உயரமான மலைப்பகுதிகளில் வசிக்கும் இந்த பறவைகள் குளிர்காலங்களில் அரிதாக நகர்ப்புறங்களில் காணப்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கிழக்கு தொடர்ச்சி மலையின் மிகச் சில பகுதிகளிலும் காணப்படும் இந்த பறவையின் சத்தம் இசையாக கேட்கும். முதன் முதலாக திருவண்ணாமலைப் பகுதிகளில் இந்த இசையைக் கேட்டுள்ளார் பறவைகள் ஆர்வலர் சிவகுமார். அவற்றைப் புகைப்படமும் எடுத்திருக்கிறார். இந்த பறவையின் வருகை திருவண்ணாமலைக்கு உணர்த்துவது என்ன என்பதை அறிய அவரிடம் பேசினோம்…
“திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலைப்பகுதியில் சில நாட்களுக்கு முன்புதான் (ஜனவரி, 2025) indian black bird என அழைக்கப்படும் மலைச்சிட்டான் பறவையைப் பார்த்தேன். இந்தியாவில் நான்குவகையான மலைச்சிட்டான்கள் உள்ளன. நான் புகைப்படம் எடுத்த மலைச்சிட்டான் பறவை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படக் கூடியது. விழுப்புரம்-பாண்டிச்சேரி இடையேயான பகுதிகளில் இதற்குமுன் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன. ஜவ்வாது மலைகளிலும் இவற்றைக் காணலாம்.
இந்த பறவையை திருவண்ணாமலையில் முதன்முதலாகக் கண்டதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், 30 வருடங்களுக்கு முந்தைய திருவண்ணாமலைப் புகைப்படத்தைப் பார்த்தால் பாறைகள் நிறைந்த, வறண்ட மலையாகத்தான் காட்சிதரும்.
அடிக்கடி இங்கு காட்டுத்தீ ஏற்படும். அவற்றில் இயற்கையாக ஏற்படுவதை விட மனித தவறுகளால் ஏற்பட்ட காட்டுத்தீயே அதிகம். 80 சதவீத காட்டுத்தீ, மில்லில் புற்களை வெட்டி கொழுத்துவது, வனப்பகுதியில் சிகரெட் குடித்தல் போன்ற காரணங்களாலேயே ஏற்படும்.
ஒரு கட்டத்தில் மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து காட்டுத் தீ உருவாவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். தீயைக் குறைக்க குறைக்க காடு வளர ஆரம்பித்தது. முன்பு இருந்ததை விட அதிக எண்ணிக்கையில், அதிக வகைகளில் பறவைகள் காணப்படுகின்றன.
திறந்தவெளி புதர்காடுகளிலிருந்து அடர்ந்த மலைக்காடாக திருவண்ணாமலை வாழிடம் மாற்றம் பெற்றிருக்கிறது. இதுவே பறவைகள் வருகைக்கு காரணம். மலைச்சிட்டான் பறவையின் வருகை திருவண்ணாமலை என்ற உயிரிகள் வாழிடம் மாறி வருவதை உணர்த்துகிறது.
கடந்த மாதம் நீலகிரி மரப் புறா என்ற பறவையைப் பார்த்தோம். இது ஒரு ஓரிட வாழ்வி. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும். காட்டுப் பஞ்சுருட்டான் எனப்படும் blue bearded bee eater பறவை மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பிரதேசங்களில் காணப்படும். இந்த பறவையையும் திருவண்ணாமலையில் தற்போது பார்க்க முடிகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் காட்டுத் தீயைத் தடுத்து, புதிய தாவரங்களை நட்டு பராமறித்ததால் திருவண்ணாமலை இன்று மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் பணியாற்றுவதால் இழந்த வாழிடத்தை மீட்டெடுக்க முடியும் என்பதையே இதுக் காட்டுகிறது.” என்றார்.
தற்போது பறவை நோக்கராக இருக்கும் சிவகுமார் அடிப்படையில் ஒரு ஓவியர். அரசியல் கட்சிகளுக்காகவும் விளம்பரங்களுக்காகவும் வரைந்துவந்த இவர், ஒரு என்.ஜி.ஓ மூலம் வன உயிரினங்களை வரையும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். வன உயிரினங்களைப் பொறுத்தவரை, அதன் நிறமும், தன்மையும் மாறாமல் அச்சு அசலாக வரைய வேண்டும். ஆரம்பத்தில் இது சவாலாக இருந்தாலும் குமாருக்கு பறவைகள் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
என்.ஜி.ஓக்களுடன் இணைந்து பறவைகள் அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறார். முதலில் ஒரு பைனாக்குலர் மூலம் பார்த்தவர், நாளடைவில் கேமரா வாங்கி, புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளார்.
தியோடர் பாஸ்கரனின் புத்தகங்கள் அவருக்கு சுற்றுச்சூழல் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பறவைகளை தொடர்ச்சியாக கண்காணிக்கிறார். தான் பார்க்கும் பறவைகளை E.Bird என்ற தளத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். இது உலகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்.