திருவள்ளூா்: கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
திருவள்ளூா் அருகே தனியாா் தொலைத் தொடா்பு நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளுா் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் உள்ள திரு.வி.க தெருப்பகுதியில் உள்ள ஆமை குட்டை அரசு புறம்போக்கு இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து அரசிடம் பட்டா பெற்றுவிட்டதாக கூறி அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனா்.
இந்த நிலையில் அந்த இடத்திற்கு பட்டா உள்ளதாக தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனத்திடம் தவறுதலாக பட்டாவை கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியுள்ளாா். தனியாா் தொலை தொடா்பு நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்க பணிகள் மேற்கொள்ள வந்துள்ளனா்.
எனவே குட்டை புறம்போக்கு இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு 100 மீ தூரத்தில் பால்வாடி, அரசு பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் கோபுரத்தில் வெளியேறும் கதிா் வீச்சால் ஆபத்து ஏற்படும். எனவே இங்கு கைப்பேசி கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி மாநகர துணை ஆணையா் ரவிக்குமாா் மற்றும் செவ்வாப்பேட்டை, காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் ஆகியோா் விசாரணை செய்தனா். அப்போது, கைப்பேசி கோபுரம் அமைப்பதை உடனே தடுக்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், கிராம மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தனா். அதன்பேரில் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவித்ததால் கைப்பேசி கோபுரப் பணி நிறுத்தப்பட்டது.
