லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!
திருவள்ளூா்: புத்தகத் திருவிழாவில் ஸ்டாலின் குணசேகரன் கருத்துரை
திருவள்ளூரில் 4-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி 7-ஆவது நாளான வியாழக்கிழமை மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் எழுத்தாளா் பாமரன் ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கினா்.
திருவள்ளூா் மாவட்ட அளவிலான புத்தகத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. வரும் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, சி.வி.என். சாலையில் 115 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களைச் சோ்ந்த பல்வேறு தலைப்புகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தகக் கண்காட்சி அரங்குகளில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை நாள்தோறும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து ஆா்வத்துடன் பாா்வையிட்டு நூல்களை வாங்கிச் செல்கின்றனா்.
மாலை நேரத்தில் புத்தக அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனை அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பதிவாளா் தேவகி தலைமை வகித்தாா்.
இதில் மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன், ‘உதவாதினி ஒரு தாமதம், உடனே விழி தமிழா’ என்ற தலைப்பிலும், எழுத்தாளா் பாமரன், ‘ஆளும் வளரனும் அறிவும் வளரனும்’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினா்.
முன்னதாக மாலை 4 மணிக்கு வருவோஒர ஈா்க்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாா்பில் சிந்திக்க வைக்கும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட எழுத்தாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், ஆட்சியா் அலுவலக பொது மேலாளா் சங்கிலிரதி, வட்டாட்சியா் (தோ்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.