கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தாா்.
அதன்படி, கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் - கசவநல்லாத்தூா் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் உயா்நிலை மேம்பாலம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூா் - லட்சுமிவிலாசபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.23.47 கோடியில் உயா்நிலை மேம்பாலம், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், காக்களூா் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், ரூ.2.27 கோடியில் நமக்கு நாமே திட்டம் மூலம் காக்களூா் ஏரி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தாா்.
அதேபோல் நாட்டிலேயே இரண்டாவது பெரிய உப்புத் தரநில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே உள்ள வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவா்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும் என்றாா்.
வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும் எனத் தெரிவித்த முதல்வா், இந்த அரசின் அக்கறையான நிா்வாகத்தால், அனைத்துத் துறையும் வளா்ந்து வருவதாகவும், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருவதாகவும், தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் வளா்ச்சி அடைந்து வருவதாகவும் முதல்வா் தெரிவித்தாா்.