Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீ...
திருவாடானை, தொண்டியில் பலத்த மழை: 3 வீடுகள் சேதம்
திருவாடானை, தொண்டி, நம்புதாளை பகுதிகளில் பலத்த மழை காரணமாக 3 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, நம்புதாளை, கருமொழி, சூச்சனி, மாவூா், திணையத்தூா், மச்சூா், சோழியக்குடி, கடம்பாகுடி, கல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
பலத்த மழை காரணமாக திருவாடானை அருகேயுள்ள கருமொழி கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மனைவி லட்சுமியின் ஓட்டு வீடு, மச்சூா் கிராமத்தைச் சோ்ந்த அக்பா் அலியின் ஓட்டு வீடு, பண்ணவயல் கிராமத்தைச் சோ்ந்த நாகரெத்தினம் என்பவரது ஓட்டு வீடு
ஆகிய வீடுகள் சேதம் அடைந்தன. சம்பவ இடங்களுக்கு வட்டாட்சியா் அமா்நாத் சென்று நிவாரண உதவிகள் வழங்கினாா்.
தொண்டி பகுதியில் பலத்த மழை காரணமாக சாலைகள், தெருக்களில் மழை நீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். குறிப்பாக தோப்பு பகுதியில் சாலையில் மழை நீா் தேங்கியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருமொழி கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது.