திருவாரூர்: சாதிச் சான்றிதழ் கேட்டுப் பழங்குடியின மக்கள் போராட்டம்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரத்தை ஒட்டியுள்ளது கழுவமுள்ளி ஆற்றங்கரை தெரு. கடந்த 40 ஆண்டுக்காலமாக அந்தப் பகுதி பழங்குடி மக்கள் தங்களது குழந்தைகளின் சாதிச் சான்றுகளுக்காகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாள்களாகத் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் நூதன போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இச்செய்தி அறிந்து களத்திற்குச் சென்று அக்குழந்தைகளின் பொற்றோரிடம் பேசினோம். ``நாங்க காலங்காலமா இதே பகுதியில தான் எங்க முன்னோர்கள் செஞ்ச, வேட்டையாடுற தொழிலையே செஞ்சிட்டு வாழ்ந்துட்டு வர்றோம். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எங்க நிலைமை மாறி, எழுத படிக்கிற அளவுக்கு எங்க பிள்ளைகள் வந்திருக்காங்க.
இப்படியா பட்ட நிலைமையில எங்க பிள்ளைங்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு சர்க்காரு பக்கம் போனா, எங்க சாதியில இல்லாம அவங்க வேற ஏதோ சாதியில அத்தாச்சி பண்ணி கொடுக்குறாங்க. இத பத்தி வெவரம் தெரிஞ்ச பெரிய ஆளுங்க கிட்ட போய் கேட்டப்போ, `உங்கள MBC கேட்டகிரில சேத்து இருக்காங்க' அப்படின்னு சொல்றாங்க. எங்களுக்கு என்ன தெரியும் MBC அப்படினா...? எங்க ஆளுங்க'ல்ல படிச்ச சிலர் சொன்னதுக்கு அப்புறம்தான் அதோட வெவரம் தெரிஞ்சுச்சு.

`கடலு தண்ணியும் ஆத்து தண்ணியும் ஒன்னு சேந்தாலும் கடலு மீனால ஆத்து தண்ணியில வாழ முடியாது; ஆத்து மீனால கடலு தண்ணியில வாழ முடியாது' இந்தக் கதைத்தான் இந்தச் சாதிச் சான்றிதழுக்கும் வந்து நிக்கிது! இந்த சர்க்காரும் அதிகாரிமார்களும் எங்களோட குழந்தைங்க படிப்புக்கு நல்ல வழி காட்டணும்'னு கேட்டுக்குறோம்" என்று கூறினார்கள்.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அன்புராஜிடம் கேட்டோம். ``இந்தச் சமுதாயத்தில் நாங்கள் `இந்து ஆதியன்' வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்கள் என்று நிரூபிப்பதற்காகத்தான் போராடி வருகின்றோம். இதற்கு முன்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்துறையிலிருந்து மானுட ஆய்வாளர்கள் கொண்ட இரு வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. 2002-ல் வந்த மானுடவியல் ஆய்வாளர், ஜோகி என்றும்... 2023-ல் வந்த மானுடவியல் ஆய்வாளர் மாரி முருகன் என்பவர் பெருமாள் மாட்டுக்காரன், உருமி நாயக்கர், பூவுடையார். போன்ற சாதிச் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளார்.
இவை அனைத்தும் எம்.பி.சி என்ற பிரிவின் கீழ் வருகிறது. ஆனால் இதே மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் என்ற கிராமத்தில் மட்டும் ஏற்கெனவே டொமாரோ என்ற சாதிச் சான்றிதழ் இருந்தது. அங்கு முனீஸ்ராஜ் என்ற மானுடவியில் ஆய்வாளர் வருகை தந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆதியன் பழங்குடியினர் என்ற சான்றிதழ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுக்கும் இது போன்று பழங்குடி வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென நாங்கள் 40 வருடங்களாகப் போராடி வருகிறோம். தற்போது அரசு சம்பந்தப்பட்ட துறையிலிருந்து மூன்று நபர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

அவர்களும் இதே அறிக்கையை தான் கொடுப்பார்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாக தெரியும். மேலும் எங்களின் உடன் பிறந்தவர்களுக்கும் உறவின்முறை நபர்களுக்கும் இந்து ஆதியன் பழங்குடி என்ற வகுப்பு சான்றிதழை அரசு வழங்கியுள்ளது. நாங்களும் அவர்களைப்போலவே காளியையும் வீரனையும் தான் வழிபட்டு வருகிறோம். தற்போது நாங்கள் அவர்களின் சாதிச் சான்றிதழைக் குறிப்பிட்டு பேசுவதால் அரசு அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. இதனை கடுமையாக எதிர்கிறோம்! மேற்கொண்டு எங்களின் உரிமைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், தற்போதைய போராட்டம் மறு வடிவம் பெற்று தீவிரமாக திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி முதன்மை சாலையில் அமர்ந்து முன்னெடுப்போம் என அரசிற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

பழங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 20 நாள்களுக்கு மேலாகப் போராடி வந்த நிலையில், தற்காலிகமாக இன்று (17.02.2025) பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் வட்டாச்சியரும் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது!