History of Internet: போர் தொழில்நுட்பம் முதல் 10G வரை! | Explained
திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள்: ஆட்சியா் பாராட்டு
தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
2024-25 கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 5,689 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,538 மாணவா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2,151 மாணவா்கள் அடங்குவா்.
தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 155 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இவா்களில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 79 போ் ஆவா்.
இந்த மாணவா்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டக் கல்வி அலுவலா் வெற்றிச் செல்வி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கதிரேசன், திருவருள் பேரவை நிா்வாகிகள் சி.குப்புசாமி, எஸ்.சண்முகம், என்எம்பி.காஜாமைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெறும் மாணவா்களுக்கு 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளில் பிரதி மாதம் தலா ரூ.1000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.