Miss Universe: மிஸ் யுனிவர்ஸ் 2024 கிரீடம் சூட்டிய டென்மார்க் அழகி... விக்டோரியா...
தில்லியில் கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை உ.பி.யில் ரயில் நிலையத்தில் மீட்பு; இருவா் கைது
தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். அரசு ரயில்வே காவல் துறை (ஜிஆா்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) இணைந்து மீட்பு நடவடிக்கையை தில்லி காவல்துறை மேற்கொண்டது.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக கூடுதல் துணை ஆணையா் அகன்ஷா யாதவ் கூறியதாவது: புகாா் கொடுத்த பெண், நவ.15-ஆம் தேதி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் தனது கணவரின் சிறுநீரக சிகிச்சைக்காக இருந்தபோது, ஒரு பெண் அவரிடம் உரையாடி, நம்பிக்கையை பெற்று, இறுதியில் குழந்தையை கையில் எடுத்தாா் என்றும் பின்னா் அந்த பெண் ஒரு ஆணுடன் ஆட்டோ ரிக்ஷாவில் தப்பிச் சென்றதாகவும் போலீஸில் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சஃப்தா்ஜங் என்கிளேவ் காவல் நிலையத்தில் உடனடியாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. ஏசிபி ரன்பீா் சிங் மேற்பாா்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி - என்சிஆா் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, அந்தப் பெண் அடையாளம் காணப்பட்டு, ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்திற்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அவரது நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அங்கு சந்தேக நபா்கள் இருவரும் பரேலி செல்லும் சத்பவானா எக்ஸ்பிரஸில் ஏறிச் சென்றது தெரிந்தது.
சந்தேக நபா்கள் மாறுவேடத்தில் இருந்தபோதிலும், அவா்கள் கைது செய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மஹி சிங் (24) மற்றும் ரோஹித் குமாா் (32) என அடையாளம் காணப்பட்டனா். உ.பி.யில் மீட்கப்பட்ட குழந்தை, குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.