தில்லியில் பசு வதை செய்ததாக 2 போ் கைது
புது தில்லி: தில்லியில் சிக்னேச்சா் பாலம் அருகே பசு வதை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்புடையதாகக் கூறப்படும் ஒரு சிறுவன் உள்பட இருவரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: நியூ உஸ்மான்பூா் நிலைய போலீஸாருக்கு காலை 8.20 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தை அடைந்ததும், தகவல் அளித்தவா் ரூபேஷ் ராணா என தெரியவந்தது. அங்கு பசு வதையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை காவல் துறையினா் கண்டுபிடித்தனா். அவா்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனா்.
இரண்டு பசுக்களின் சடலங்கள், இறைச்சிக் கருவிகள், ஒரு சிரிஞ்ச், ஒரு மருந்து பாட்டில் மற்றும் விலங்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் மேலும் பலா் ஈடுபட்டாா்களா என்பதை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.