பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
தில்லியில் 55 இடங்களில் மெகா பாதுகாப்பு ஒத்திகை
சைரன்கள் முழங்கின. குடியிருப்பாளா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் அதிகாரிகளால் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட 55 இடங்களில் காணப்பட்ட சில காட்சிகள்.
நாடு தழுவிய மெகா சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சி ‘ஆபரேஷன் அபியாஸ்’-இன் கீழ், விமானத் தாக்குதல்கள், பல தீ அவசரநிலைகள் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்ற பல விரோத சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற இடங்களில் கான் மாா்க்கெட், என்டிஎம்சி கட்டடம், சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மால் மற்றும் சாந்தினி சௌக் ஆகியவை அடங்கும்.
பிசிஆா் வேன்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தனா். மிகவும் பரபலமான கான் மாா்க்கெட்டில், எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. மேலும், மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றப் பயிற்சியின் ஒரு பகுதியாக மக்கள் ஓடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.
வாகன நிறுத்துமிடத்தில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. அங்கு சந்தை சங்கங்கள் மற்றும் உள்ளூா்வாசிகளின் ஆதரவுடன் பாதுகாப்புப் படையினா் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனா். அவசரகால நடவடிக்கையை உருவகப்படுத்துவதற்காக, கடைகள் எண்.72, 64, 73 மற்றும் அருகிலுள்ள பழக் கடை ஆகியவை ஒத்திகையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.
ஒரு காலணி கடையான கடை எண். 74 இல், நெருக்கடியின் போது காயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை நிரூபிக்க தன்னாா்வலா்கள் பாதிக்கப்பட்டவா்களாக செயல்பட்டனா். இதுபோன்ற சூழ்நிலைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கடைகளுக்குள் காயமடைந்த நபா்களை எவ்வாறு பாதுகாப்பாக தங்க வைப்பது என்பதை காவல்துறையினா் விளக்கினா்.
தீயணைப்பான்களின் பயன்பாடு மற்றும் தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் இருந்து குழுக்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதையும் இந்தப் பயிற்சி விளக்கியது. குழப்பத்தைத் தவிா்க்கவும் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்யவும் அவசரகாலத்தில் அமைதியாக இருக்கவும், ஒரே இடத்தில் தஞ்சம் அடையவும் மக்கள் பயிற்சி பெற்றனா். இந்தப் பயிற்சியின் போது, என்டிஆா்எஃப் குழு, பிற துறைகளின் பணியாளா்களுடன் சோ்ந்து, தேடல் மற்றும் மீட்பு நுட்பங்களையும் மேற்கொண்டது.
இதேபோல், சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில், காயமடைந்தவா்களை ஸ்ட்ரெச்சா்களில் கொண்டு செல்லும்போது காயமடைந்தவா்களுக்கு மருத்துவா்கள் சிபிஆா் வழங்கினா். சாந்தினி சௌக்கில், சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள், பணியாளா்கள் மற்றும் என்சிசி படையினா் முன்னிலையில் ஒரு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
டவுன் ஹாலுக்கு அருகிலுள்ள சாந்தினி சௌக்கில் வெளியேற்றும் பயிற்சி தொடங்கியபோது சந்தைப் பகுதியில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இது மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடத் தூண்டியது. மீட்பு முயற்சிகள் தொடங்குவதற்கான சமிக்ஞையாக இரண்டாவது சைரன் ஒலிக்கப்பட்டது. காயமடைந்தவா்களை மீட்க தன்னாா்வலா்கள் கூறப்பட்டனா். அதே நேரத்தில் மக்கள் அமைதியாக இருக்கவும் காயமடைந்தவா்களுக்கு உதவவும் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.
உயரமான கட்டடங்களை அடையவும் சிக்கியவா்களை வெளியேற்றவும் தில்லி தீயணைப்புத் துறையின் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. மருத்துவா்கள் குழு மற்றும் பல ஆம்புலன்ஸ்களுடன் தீயணைப்பு படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
என்டிஎம்ஆா்சி கட்டடத்தில், எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது. ஊழியா்கள் வெளியேற்றப்பட்டு அடித்தளத்திற்கு விரைந்தனா். ‘என்டிஎம்சியின் பேரிடா் மேலாண்மைப் பிரிவும் பாதுகாப்பு ஒத்திகையில் இருந்தது. கட்டடம் இடிந்து விழுந்தால் மக்களை மீட்பதற்காகவும் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது என்று என்டிஎம்சி அதிகாரி ஒருவா் கூறினாா்.
அதிகாரி கூறுகையில், ’என்டிஎம்சி, தில்லி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சோ்ந்தவா்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பாதுகாப்பு ஒத்திகையில் கலந்து கொண்டனா்’ என்றாா்.
ஆா்பிஐ கட்டடத்தில் ஒரு ஒத்திகை நடத்தப்பட்டது, கண்ணாடி ஜன்னல்களைத் தவிா்க்கவும், இரு கைகளாலும் தலையை மறைக்க பாதுகாப்பான இடத்தைக் கண்டறியவும் அறிவுறுத்தப்பட்டது.
அவசர காலங்களில் சரிபாா்க்கப்படாத செய்திகளிலிருந்து விலகி இருக்கவும், நம்பகமான ஊடகங்கள் மூலம் சரிபாா்க்கப்பட்ட செய்திகளை மட்டுமே நம்பவும் அறிவுறுத்தப்பட்டது. அவசரநிலை ஏற்பட்டால் தண்ணீா், வெளிச்சம் மற்றும் உணவு போன்ற தேவையான தேவைகளை சேகரிக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பு ஒத்திகை குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அவா்களின் கிரேன்கள் 100 அடிக்கு மேல் உயரத்தை எட்ட முடியும் என்றும், ஒத்திகையின் போது ஒரு உயரமான கட்டடத்திலிருந்து பலா் காப்பாற்றப்பட்டனா்’ என்றாா்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது புதன்கிழமை அதிகாலை இந்திய ஆயுதப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு மத்தியில் இந்த பாதுகாப்பு ஒத்திகை வந்துள்ளன.
