தில்லி கூட்ட நெரிசல் ரயில்வேத் துறையின் தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு!
தில்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பலியானதற்கு ரயில்வேத்துறையின் தோல்வியே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது சனிக்கிழமை இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது, சில விரைவு ரயில்கள் வர தாமதமானது, அதிக விலைக்கு சிலர் டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது உள்ளிட்டவை தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைத்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலுக்கு ரயில்வேத்துறையின் தோல்வியே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்தச் சம்பவம் ரயில்வேயின் தோல்வியையும், அரசின் உணர்வின்மையையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மும்மொழி திட்டத்தை ஏற்றால்தான் நிதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால் யாரும் உயிரிழக்காமல் இருக்க அரசும், நிர்வாகமும் உறுதியளிக்க வேண்டும். கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் பலர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி மிகவும் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். இதனிடையே கூட்ட நெரிசலில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவத்தில் ஏற்பட்டுள்ள மரணங்கள் குறித்த "உண்மையை மறைக்க" மோடி அரசு முயற்சிப்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டனத்திற்குரியது என்றார்.