அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்
தில்லி தேர்தல் முடிவுகள்: பாஜக 43, ஆம் ஆத்மி கட்சி 27-ல் முன்னிலை!
புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 43 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 27 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாகவும், கேஜரிவால் 343 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருவதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப்.5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை(பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்திய தேர்தல் ஆணைய தரவுகளின்படி பாஜக - 43 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி - 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதலில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், 343 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்கைவிட முன்னிலையில் இருந்து வருகிறார்.
இருப்பினும், ஜக்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 1,314 வாக்குகள் பின்தங்கியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியை விட முதல் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 1,149 வாக்குகள் பின்தங்கியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தில்லி ஆட்சி அமைக்கும். தலைநகரில் இருந்து ஆம் ஆத்மி கட்சி அகற்றப்படும் என்று ரமேஷ் பிதூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி: சித்தார்த் சாஹிப் சிங்
முஸ்தபாபாத் தொகுதியில் மூன்று சுற்றுகளுக்குப் பிறகு பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட் 16,181 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அங்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தாஹிா் ஹுசைன் பின்தங்கியுள்ளார்.
ஓக்லா தொகுதியில் பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரியை விட ஆம் ஆத்மி வேட்பாளர் அமந்துல்லா கான் 2,260 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
கிரேட்டர் கைலாஷில் ஆம் ஆத்மியின் சவுரப் பரத்வாஜ் 459 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார், பாபர்பூர் தொகுதியில் அமைச்சர் கோபால் ராய் 8,995 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கரவால் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா 8,603 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார், அதே நேரத்தில் திரி நகரில் திலக் ராம் குப்தா 8,339 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக வேட்பாளர்களான சஞ்சய் கோயல், சந்தன் சவுத்ரி , பஜ்ரங் சுக்லா, துர்கேஷ் பதக், அஞ்சனா பர்ச்சா வீர் சிங் திங்கன் மற்றும் கர்தார் சிங் தன்வார் ஆகியோரும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தில்லி சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பாஜக 43 இடங்களிலும், ஆம் ஆத்மி 27 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தில்லியின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தான் என தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
பாஜக ஆதரவாளர்கள் வாத்தியங்கள், தாளங்களுடன் நடனமாடி, கட்சிக் கொடிகளை அசைத்தும், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையின் கட்அவுட்களை உயர்த்தியும், ஒருவருக்கொருவர் காவி நிறப் பொடியைப் பூசிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1998 முதல் 2013 வரை தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், முந்தைய இரண்டு தேர்தல்களில் ஒரு இடத்தைக் கூட வெல்லத் தவறிய பிறகு மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.