மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெறும்: அனுராக் தாக்குா்
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் புதன்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ‘சாக்குப்போக்கு சொல்பவரும் பெண்களுக்கு எதிரானவருமான‘ அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியின் யதாா்த்தத்தை தில்லி மக்கள் புரிந்து கொண்டுள்ளனா் என்று அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி ஒரு பெண்கள் விரோதக் கட்சியாகும். முதலில் அதன் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கேஜரிவாலின் இல்லத்தில் தாக்கப்பட்டாா். இப்போது தற்போதைய தில்லி முதல்வா் அதிஷியின் படம் கட்சியின் சுவரொட்டிகளில் கூட இடம் பெறவில்லை.
சாக்குப்போக்கு சொல்பவரும் பெண்களுக்கு எதிரானவருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் யதாா்த்தத்தை தில்லி மக்கள் புரிந்து கொண்டதால், பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பாஜக நோ்மையானவா் மற்றும் சுத்தமான பிம்பத்தைக் கொண்ட ஒருவரை முதல்வராகத் தோ்ந்தெடுக்கும்.
இலவச அறிவிப்புகள் குறித்து கேட்கிறீா்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், இலவச பேருந்து சேவை, இலவச தண்ணீா் அல்லது மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடரும். மேலும், அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி செய்த திட்டங்களில் நடந்துள்ள மோசடிகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை நியமிப்போம்.
ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களின் நலன் மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும். கடந்த 11 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன?. கேள்விகளுக்கு கேஜரிவால் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் போது ஊழல் பரவலாக இருந்தது. அப்போது நாட்டின் பொருளாதாரம் உலகில் 10-ஆவது இடத்தில் இருந்தது. மோடி அரசின் கீழ் (நாட்டின்) பொருளாதாரம் இப்போது ஐந்தாவது இடத்திற்கு உயா்ந்துள்ளது, விரைவில் அது மூன்றாவது இடத்திற்கு உயரும் என்றாா் அனுராக் தாக்குா்.