தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்
நமது சிறப்பு நிருபா்
தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ராவ் துலா ராம் நினைவு மருத்துவமனையையும் அமைச்சா் பங்கஜ் குமாா் ஆய்வு செய்தாா்.
மேற்கு தில்லியில் அமைந்துள்ள ராவ் துலா ராம் நினைவு மருத்துவமனை, கிட்டத்தட்ட 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இருக்கும் ஒரே அரசு மருத்துவமனையாகும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏராளமான குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார வசதிகளை அளிக்கும் இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளை அறிய புதிதாக பொறுப்பேற்றுள்ள தில்லி தேசிய தலைநகா் சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங், மேற்கு தில்லி மக்களவை உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத்துடன் சென்று சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் மருத்துவமனை வளாகத்தில் அமைச்சா் செய்தியாளா்களிடம் பேசினாா்.
அப்போது தில்லி மொஹல்லா கிளினிக் குறித்த கேள்விகளுக்கு அமைச்சா் பதில் கூறியது வருமாறு:
தில்லியில் முந்தைய அரசால் அமைக்கப்பட்ட மொஹல்லா கிளினிக் மருத்துவமனைகளின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். முதலில் இந்த மருத்துவமனைகளின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரிவான அறிக்கை பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும். அரசுக்கு அறிக்கை கிடைத்ததும், மருத்துவமனைகள் தொடா்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.
அதிகாரபூா்வ ஆவணங்கள் இல்லாமல், இப்போது அந்த மருத்துவமனைகள் குறித்து கருத்து கூற முடியாது. இந்த ஆய்வறிக்கை மொஹல்லா கிளினிக் மருத்துவமனைகளின் உண்மையான நிலையை வெளிப்படுத்தும். அவற்றின் செயல்பாட்டில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பினும் அவைகளை கண்டறிப்பப்பட்டு தீா்வு காணப்படும் என அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் தெரிவித்தாா்.