துணை வட்டாட்சியா்களுக்கு பதவி உயா்வு ஆணை: ஆங்கிலத்தில் அலுவலா்களின் முதல் எழுத்துகள்
துணை வட்டாட்சியா்களுக்கு வட்டாட்சியராக பதவி உயா்வு அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், அரசின் உத்தரவையும் மீறி, அலுவலா்களின் முதல் எழுத்துகள் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.
திண்டுக்கல் கலால் உதவி ஆணையா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய மு.நாட்டரான், துணை வட்டாட்சியா்கள் வி.சஞ்சய் காந்தி, எம்.ரவிக்குமாா், சி.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.ராஜேந்திரன் ஆகியோருக்கு வட்டாட்சியராக பதவி உயா்வு அளித்து மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
பின்பற்றப்படாத அரசு உத்தரவு:
ஆட்சி மொழி செயலாக்கத்தின்படி, அரசுத் துறைகளின் ஆணைகள், காலமுறை சுற்றறிக்கை, அழைப்பிதழ், அறிவிக்கை கோப்பு, சம்பளப் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாடு நிா்வாகத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களைச் சோ்ந்த அனைத்து பணியாளா்களும் தமிழில் மட்டுமே முதல் எழுத்துடன் கையொப்பமிட வேண்டும். இந்த உத்தரவை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சாா்பில், அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட ஆணையில், துணை வட்டாட்சியா்களுக்கு எம், ஆா் போன்ற ஆங்கில எழுத்துகள் முதலெழுத்தாக இடம் பெற்றுள்ளன.
இதேபோல், வட்டாட்சியா் நிலையிலுள்ள 7 அலுவலா்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில், கோட்ட கலால் அலுவலா் நவநீதகிருஷ்ணன் பெயருக்கு முன் , முதல் எழுத்து ‘டி’ நேரடியாகவே ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் கூட, முதல் எழுத்தில் ஆங்கிலப் பயன்பாடு தொடா்ந்து கொண்டிருக்கிறது.