``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
துருக்கி நிலநடுக்கத்தினால் இரவு முழுவதும் சாலைகளில் கழித்த மக்கள்!
துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று (ஏப்.23) பிற்பகலில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1.6 கோடி மக்கள் வாழும் அந்நகரத்தில் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 180-க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய இஸ்தான்புல் மக்கள் நேற்று (ஏப்.23) முதல் அங்குள்ள சாலைகள் மற்றும் திறந்தவெளியில் கழித்து வருவதாகவும் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கு அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தினால், தங்களது வீடுகள் இடிந்து சரியக்கூடும் எனும் அச்சத்தில் மக்கள் பெரும்பாலானோர் அவர்களது வாகனங்களிலும், பூங்காக்களில் கூடாரம் அமைத்தும் தங்கியுள்ளனர். மேலும், அங்கு இரவில் வெப்பநிலைக் குறைந்து குளிர் அதிகரித்ததினால் பெரும்பாலானோர் தீ மூட்டி குளிர் காய்ந்ததாகக் கூறியுள்ளனர்.
முன்னதாக, நேற்று இஸ்தான்புல் நகரத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள மர்மரா கடலுக்கு அருகிலுள்ள பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் அந்நகரம் முழுவதும் கடுமையான அதிர்வுகளை சந்தித்தது.
ஆனால், நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டாலும் கட்டடங்களிலிருந்து தப்பிக்க முயன்று அதிலிருந்து குதித்து காயமடைந்த 236-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலநடுக்கம் அபாயமுள்ள நாடான துருக்கியில் கடந்த 2023-ல் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 53,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானர்கள். இதில், அண்டை நாடான சிரியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்நாட்டில் 6,000-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானிய திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை!