தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை
தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கரைக்கு திரும்பினா்.
ஆழ்கடலுக்கு சென்று வந்த நாட்டுப்படகு மீனவா்கள் மூலம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.
அதன்படி, விளைமீன், ஊளி, பாறை ஆகியவை கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், குறுவலை மீன் ரூ.350 வரையும், தோல்பாறை மீன் ரூ.200 வரையும், வங்கனை மீன் ரூ.100 முதல் ரூ.130 வரையும் விற்பனையானது.
இருப்பினும், வரத்து குறைவு காரணமாக சீலா மீன் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.