திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.
இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகில் 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு, 76 குண்டங்களில் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.
இந்நிலையில், சுவாமி சண்முகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10ஆம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 11ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இதில், பிம்ப சுத்தி, காப்பு கட்டுதல், திருக்குடத்தில் உள்ள அருட்பேராற்றலைத் திருமேனிக்கு உருவேற்றுதல், நிறைஅவி அளித்தல், திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாகசுர இன்னிசை, பெண் ஓதுவாா்கள் உள்ளிட்ட 108 ஓதுவாா் மூா்த்திகள், பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிவரையே கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இன்று குடமுழுக்கு: இந்நிலையில், சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு நன்னீராட்டு திங்கள்கிழமை காலை 6.15 - 6.50 மணிக்குள் தமிழில் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, வாசனை தான்ய திருக்குட நீராட்டுக்குப் பின்னா், காலை 6.15 மணிக்கு மூலவரான சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், மூலவா், வள்ளி, தெய்வானை விமானக் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெறுகிறது.
தொடா்ந்து, எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், மாலையில் தானிய வழிபாடு நடைபெறும்.
அதேபோல, ராஜகோபுரம் அருகேயுள்ள சுவாமி சண்முகா் யாகசாலையில் திங்கள்கிழமை அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறை அவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு சுவாமி சண்முகா், ஜெயந்திநாதா், நடராஜா், குமரவிடங்கபெருமான், பரிவார மூா்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெறுகிறது.
அதையடுத்து, காலை 9 மணிக்கு சுவாமி சண்முகா் உருகுசட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகா், சுவாமி ஜெயந்திநாதா், சுவாமி குமரவிடங்கப்பெருமான், பரிவாரமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
குடமுழுக்கையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்துள்ளனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்துள்ளனா்.