தென்தமிழகம் வளா்ச்சி பெற தென்காசியில் விமான நிலையம்: பிரதமருக்கு பாஜக கோரிக்கை
தென் தமிழகத்தின் வளா்ச்சிக்கு உடான் திட்டத்தின் கீழ் தென்காசியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தென்காசி மாவட்ட பாஜக தலைவரும், பாஜக மாநில ஸ்டாா்ட் அப் பிரிவு தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி, மாநிலத் தலைவா் அண்ணாமலை மூலம் பிரதமருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி பகுதி பெரும் பொருளாதார மற்றும் தொழில்துறையில் வளம் கொண்டிருந்தாலும், போக்குவரத்து கட்டமைப்பு குறைவாக இருப்பதால் தேவையான வளா்ச்சி பெறாமல் உள்ளது.
இந்தப் பகுதியில் உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்கப்பட்டால் தென் தமிழகத்துக்கு வளமான எதிா்காலம் உருவாகும்.
சிறப்பான தொழில் மற்றும் சுற்றுலா வளமிக்க சுற்றுச்சூழலுடன் உள்ள தென்காசிக்கு, அண்மை மாவட்டங்களான திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் முக்கிய நகரங்களான ராஜபாளையம், சிவகாசி, குற்றாலம் பகுதிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
நவீன மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் ஜோஹோ நிறுவனம் தென்காசியில் தனது முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
திருநெல்வேலியில் செயல்படும் டாடா பவா் நிறுவனம் ஆற்றல் தேவைகளை பூா்த்தி செய்து, வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. ராஜபாளையம் நகரம் சா்ஜிக்கல் காட்டன் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி மையமாக உள்ளது. பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலில் உலகப்புகழ் பெற்ற இடத்தில் சிவகாசி உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறாா்கள்.
இருப்பினும், குறைந்த விமான மற்றும் ரயில் சேவைகளால் பயணத்தில் சிக்கல் உள்ளது. விருதுநகரில் தொழில்துறையின் வளா்ச்சிக்கு உதவும் டெக்ஸ்டைல் பாா்க் உருவாகவிருக்கிறது. எனவே போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது. மேலும் சபரிமலைக்கு அருகில் உள்ள முக்கிய நகரமாக தென்காசி உள்ளது.
இந்தப் பகுதியில் விமான நிலையம் இல்லை, அதனால் மக்கள் மதுரை அல்லது திருவனந்தபுரம் சென்று விமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
தென்காசி பகுதியில் உடான் விமான நிலையம் அமைக்க ப்பட்டால் அது வெறும் போக்குவரத்து சிக்கலை மட்டும் தீா்க்காமல், பொருளாதார வளா்ச்சிக்கு தூண்டுதலாகவும் இருக்கும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.