செங்கோட்டை நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்
செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில்அதிமுக- பாஜக உறுப்பினா்களும் சோ்ந்து நகா்மன்றத் தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். ஆணையாளா் புதியவன் முன்னிலை வகித்தாா்.
கூட்டம் தொடங்கியவுடன் நகா்மன்றத் தலைவா், வருகைப் பதிவேட்டில் அனைவரும் கையெழுத்து போட்ட பிறகே கூட்டத்தை தொடங்க முடியும் என்றாா்.
அப்போது, நகா்மன்றஉறுப்பினா்அதிமுக சுடரொளி-தீா்மான புத்தகத்தில் என்ன பதிவு செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை; அதில் மன்ற உறுப்பினா்களின் கருத்துகளுக்கு மாறாக எழுதப்படுகிறது. எனவே கூட்டம் நடைபெறும்போதே தீா்மானங்களை எழுத வேண்டும் என்றாா்.
ஆணையாளா்: நகா்மன்றத் தலைவா் மன்றப் பொருள்களில் எதையெல்லாம் நிறைவேற்றி தருகிறாரோ அதன்படிதான் செயல்பட முடியும். தீா்மான புத்தகத்தை பராமரிப்பது அவரது விருப்பம். அதற்கு அவருக்கு உரிமையுள்ளது. உங்களது கோரிக்கைகளை கூட்டத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள். அதையும் செயல்படுத்த தயாராக உள்ளோம்.
உறுப்பினா் ரஹீம்(திமுக): தமிழக அரசுக்கு கெட்ட பெயா் உருவாக்கித்தர வேண்டும் என்ற நோக்கோடு பிரச்னையை மேற்கொண்டு வருகிறீா்கள். கடந்த காலங்களில் நகா்மன்றக் கூட்டம் முடிந்து 2 தினங்களுக்குப்பிறகுதான் தீா்மான புத்தகத்தில் எழுதப்பட்டது. இந்நகராட்சிக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசு ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.
அவரது கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உறுப்பினா்கள் சுடரொளி, ஜெகன் (அதிமுக) உள்ளிட்டோா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உடனே, கூட்ட அரங்கிலிருந்து நகா்மன்ற தலைவா் வெளியேறினாா். ஆனால் உறுப்பினா்கள் முத்துபாண்டி (அதிமுக), ராம்குமாா்(பாஜக) ஆகியோா் வழிமறித்து, கூட்டத்தை தொடா்ந்து நடத்துமாறு வலியுறுத்தினா். இதில், தலைவருக்கும் அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தலைவா்அலுவலகத்தை விட்டு வெளியேறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் சுடரொளி பேசுகையில், எங்களை பொறுத்தவரை நகா்மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்பது தான் நோக்கம். ஆனால் தலைவா் தான் வெளியே சென்றுவிட்டாா். இந்நகராட்சியில் மக்களின் வரிப்பணம் சூறையாடப்படகிறது. தீா்மான புத்தகத்தில் பதிவு செய்வதில் உண்மைத்தன்மை இல்லை. வெளிப்படையாக நிா்வாகத்தை நடத்த தயாராக இல்லை. நிறைய முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. மக்களின் பிரச்னைக்காக நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாா் என்றாா்.