அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
தென்னை நார் பொருள்களுக்கு தனித்துவமான வணிகக் குறியீடு: அமைச்சர்
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகாரம் பெற ஒரு தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று(ஏப். 9) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
அவற்றுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்னை நார் சார்ந்த பொருள்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
1. தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் ஆர்வலர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொழில் நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ரூ.5 கோடி மதிப்பில் ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டிலிருந்து தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் பொருட்டு டான்காயர் மூலமாக ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவைப்படும் உதவிகளான தொழில் நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இதற்கென குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்தின் நிதியிலிருந்து ரூ.3 கோடியும் தமிழ்நாடு கயிறு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.2 கோடியும் செலவிடப்படும்.
2. தென்னை நார் உற்பத்தியில், மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கும் விதத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு மேம்பாட்டு மையம் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் புவி விரிப்புப் பொருட்கள் உற்பத்தி வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தலுக்கான ஒரு சிறப்பு நெறிப்படுத்தல் மையம் (Nudge Unit) ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு புத்தாக்க ஆராய்ச்சி நிதி (TANII) திட்டத்தின் கீழ் நிறுவப்படும். இம்மையம், தமிழ்நாட்டில் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட புதிய பொருட்கள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.
3. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் சார்ந்த பொருள்களுக்கு சந்தை அங்கீகாரம் பெற தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருள்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகாரம் பெற ஒரு தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும். இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனையை அதிகரிக்க உதவும்.
4. தென்னை நார் பொருள்களுக்கென சிறப்பு வாங்குபவர் விற்பவர் சந்திப்புகள் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் மூலம் ரூ. 40 லட்சம் செலவில்நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கு உள்நாடு மற்றும் உலகளாவிய அளவில் சந்தை வாய்ப்பினை அதிகரிக்க தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கென சிறப்பு வாங்குபவர் விற்பவர் சந்திப்புகள் ரூ.40 லட்சம் செலவில் நடத்தப்படும்.
இதையும் படிக்க: தொழிலாளர் நலத் துறைக்கு 11 முக்கிய அறிவிப்புகள்!