தென்னை மரங்களை பாதுகாக்க போா்க்கால நடவடிக்கை தேவை: நல்லசாமி
ரூக்கோஸ் நோயைத் தடுத்து தென்னை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.
பழனி அடிவாரம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு அந்த இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளா்கள் ராமகிருஷ்ணன், செல்வராஜ், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலா் தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி பேசியதாவது: கள் விடுதலை குறித்த கருத்துக்கு உடன்பாடு என்றால் கூட்டணி, முரண்பாடு என்றால் வாதம் என்ற பொருளில் தற்போது எங்கள் இயக்கம் செயல்படுகிறது. இரண்டுக்கும் வராத கட்சி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன. தமிழக அரசுக்கு கள் விடுதலை குறித்து அனுப்பிய எந்த கடிதத்துக்கும் இதுவரை பதில் இல்லை. எடப்பாடி பழனிசாமி கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தால் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெறுவாா். அதேபோல, த.வெ.க, தலைவா் நடிகா் விஜய்யும் கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தால் வாக்கு வங்கி அதிகரிக்கும். ஆனால் இதைப் பற்றி பேச பலரும் தயங்குகின்றனா்.
அரசியலமைப்பு சட்டப்படி கள்ளை போதைப்பொருள் எனக் கூறி வழக்குப் பதியமுடியாது. இதனால் அரசுக்கும், காவல் துறைக்கும் விரைவில் தமிழ்நாடு கள் இயக்கம் நெருக்கடி தரும். இந்தியாவில் ரூக்கோஸ் நோயால் மூன்றில் ஒரு பங்கு தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. வருங்காலங்களில் கோயில்களில் சுவாமிக்கு உடைக்கக் கூட தேங்காய் இருக்காது. எனவே, தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை மேற்கொண்டு தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.