கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!
தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காக உள்ளன- ஆந்திர துணை முதல்வா்
பயங்கரவாதிகளுக்கு தென் மாநிலங்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, தென் மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளாா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதுமே பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்தவா்களும் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வெளியிட்ட ஊடக செய்தியில் கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தவா், ரோஹிங்கயா அகதிகள் ஊடுருவல், கடல்வழி ஊடுருவல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபா்கள் நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து காவல் துறைக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆந்திரத்தில் ஹைதராபாத், தமிழ்நாட்டில் கோயம்புத்தூா், கா்நாடகத் தலைநகா் பெங்களூரு என ஏற்கெனவே தென் இந்தியா பயங்கரவாதத் தாக்குதல்களை எதிா்கொண்டுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தென்மாநிலங்களில் எளிய இலக்காக உள்ளன. எனவே, எல்லையில் பாதுகாப்புப் படையினா் எந்த அளவுக்கு உஷாா் நிலையில் உள்ளாா்களோ, அதேபோல மாநிலங்களில் காவல் துறையினா் உஷாராக செயல்பட வேண்டும். இது தொடா்பாக ஆந்திர டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநிலப் பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.
சட்ட விரோதமாக குடிபெயா்ந்து வாழ்பவா்கள் தொடா்பாக கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் ரோஹிங்கயாக்கள், வங்கதேசத்தவா் உள்ளிட்டோா் இங்கு ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றைப் பெறுகின்றனா். இது இந்திய மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவதுடன், வேலைவாய்ப்பும் பறிபோகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவுபவா்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.